Monday, August 21, 2017

விஜயதாஸ ராஜபக்ஷ மீது இன்று சட்டநடவடிக்கை?

புத்த சாசன மற்றும் நீதியமைச்சராக பதவி வகிக்கும் விஜயதாச ராஜபக்ஷவின் இரண்டு அமைச்சுப் பதவிகளும் இன்றைக்குள் அவரிடமிருந்து நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் கட்சித் தலைமையை விமர்சித்தும், அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறும் வகையிலும் அண்மைக்காலமாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கருத்து வெளியிடத் தொடங்கியிருந்தார்.
அத்துடன் முன்னாள் அரசாங்கத்தின் ஊழல் பேர்வழிகள் குறித்த வழக்குகளை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளிலும் விஜயதாச ராஜபக்ஷவுக்குத் தொடர்பிருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
மேற்குறித்த காரணங்களுக்காக அவர் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியிருந்தனர்.
எனினும் தனது தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் அது தொடர்பில் கட்சிரீதியாக மன்னிப்புக் கோருவதற்குமான அவகாசமொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு வழங்கியிருந்தார். அவ்வாறு தன்னைத் திருத்திக் கொள்ள விஜயதாச ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்குமிடத்து அவருக்கு பௌத்த சாசன அமைச்சராக தொடர்ந்தும் செயற்படுவதற்கான இடமளிக்கவும் உத்தேசிக்கப்பட்டிருந்தது.
குறித்த காலஅவகாசம் திங்கட்கிழமை மாலையுடன் நிறைவுபெற்றுள்ளது. எனினும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தன்னைத் திருத்திக் கொள்வதற்குப் பதிலாக தொடர்ந்தும் அரசாங்கத்தையும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையையும் விமர்சித்துக் கொண்டிருந்தார்.
இதன் காரணமாக அவரை அமைச்சுப் பதவியில் இருந்து முற்றாக நீக்குமாறு கோரும் கடிதமொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திங்கள் இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் கையளித்துள்ளார். இதன்போது அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாசிம் உள்ளிட்டோரும் விஜயதாசவுக்கு எதிராக ஜனாதிபதியிடம் விளக்கமளித்துள்ளனர்.
இந்நிலையில் செவ்வாய் மாலைக்குள்ளாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் இருக்கும் இரண்டு அமைச்சுப் பதவிகளும் நீக்கப்படும் என்று நம்பகமாகத் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment